நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு நிலத்திணை. தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணைகளைக் கொண்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும்போது அது ஐந்தாக எண்ணப்பட்டது. இவையே தமிழர் நிலத்திணைகள்.
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை.
காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை.
வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்.
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் ஆகும்.(மணலும் மணல் சார்ந்த இடமும்) பாலை எனப்பட்டது.
இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
திணை என்பது ஒழுக்கம். அகத்திணை என்பது அகவொழுக்கம். புறத்திணை என்பது புறவொழுக்கம். தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு ஐந்திணைப் பாகுபாடு கொள்ளப்படுகிறது.
இந்தப் பாகுபாடு ஐந்து வகைப்பட்ட திணை-ஒழுக்கங்களை மையமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. புணர்தல், தலைவன் புறவொழுக்கத்தில் பிரியும்போது தன்னை ஆற்றிக்கொண்டு இருத்தல், தலைவன் தன்னை விட்டு அகவொழுக்கத்தில் பிரியும்போது ஊடுதல், கடலில் சென்றவருக்காக இரங்கல், புறப்பொருளுக்காகப் பிரிதல் என்பன அகத்திணைக்கு அகத்திணை உரிப்பொருள்கள். இவற்றில் திணை மயக்கம் நிகழ்வது இல்லை. எனவே மயங்காத உரிப்பொருளின் அடிப்படையில் இன்ன பாடல் இன்ன திணை எனக் கொள்ளப்படும். எனவே குறிஞ்சித் திணை என்பது ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ பற்றிய செய்திகளைக் கூறுவது என்பது பொருள். பிற திணைகளுக்கும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும்.
நானிலம்
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த நிலமும்
முல்லை காடும் காடு சார்ந்த நிலமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெய்தல் கடலும் கடல் சார்ந்த நிலமும்
தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர்.
ஐந்நிலம்
மேலே கண்ட நான்கு வகை நிலப் பாகுபாட்டுடன் பருவ மாற்றத்தால் தோன்றும் பாலை நிலத்தையும் சேர்த்து ஐந்நிலம் எனக் கொண்டனர். தமிழ்நாட்டில் பாலை நிலம் இல்லை. பாலை நிலம் என்பது குறிஞ்சி-நிலத்திலும், முல்லை-நிலத்திலும் தோன்றும் பருவநிலை மாற்றம். ஐந்நிலம் என்பது ஐந்து வகைப்பட்ட நிலம். ஐந்திணை என்பது ஐந்து வகைப்பட்ட ஒழுக்கம்.
ஐந்திணை நிலவளம்
ஐந்து வகைப்படுத்தப்பட்ட நிலத்தின் வழித்தடப் பாங்கைப் பதிற்றுப்பத்து பாடல் விளக்குகிறது. தொல்காப்பியம், நம்பியகப்பொருள் ஆகிய இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் இந்த நிலப்பாகுபாடுகளை விரிவாக எடுத்துரைக்கின்றன.
குறிஞ்சி – குறிஞ்சி திரிந்து பாலையாகிய நிலம் இப்பாடலில் காட்டப்பட்டுள்ளது.
முல்லை – இந்த நிலத்து மக்கள் நிலத்தை உழுது வரகும், தினையும் விளைவிப்பர். வழிப்போக்கர்களுக்கு நுவணை என்னும் தினைமாவை விருந்தாகத் தருவர்.
மருதம் – மருத மரத்தைச் சாய்த்துக்கொண்டு வயலில் பாயும் வெள்ளத்தைத் தடுக்க வயலிலுள்ள கரும்பை வெட்டிக் குறுக்கே போட்டு அணைப்பர். இந்தத் தடுப்பு-விழா முரசு முழக்கத்துடன் நிகழும்.
நெய்தல் நிலத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வளம் நிறைந்த கானல் என்னும் மணல்-காடு. ஞாழல் மரங்களும், நெய்தல் கொடிகளும் இந்த நிலத்தின் தாவரங்கள். வெண்ணிறச் சிறகு கொண்ட குருகு இந்த நிலத்துப் பறவை.[9] மற்றொன்று மென்புலம். இங்கு அடும்பு கொடிகள் படர்ந்திருக்கும். சங்கு, முத்து, பவளம் ஆகியன விளையும்.
பாலை
இதில் குறிஞ்சி நிலம் திரிந்த பாலை ஒருவகை.
இங்கு வாழும் மக்கள் வேட்டுவர். இவர்கள் தம் தலையில் காந்தள் பூவைக் கண்ணியாகப் பிணைத்துத் தலையில் சூடிக் கொள்வர். வில்லம்பு கொண்டு ஆமான்களை உணவுக்காக வேட்டையாடுவர். யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து ஊர்க் கடைத் தெருவில் ‘பிழி’ என்னும் தேறலுக்காக விற்பர்.
முல்லை நிலம் திரிந்த கடறு மற்றொரு வகை.
இது காடு விளையாமல் வறண்டு கிடக்கும் நிலம். இங்குள்ள மகளிர் ஆண்கள் காலில் அணியும் கழலை வீரத்தின் வெளிப்பாடாக அணிந்துகொண்டு திரிவர்.
ஐந்து வகை தமிழர் திணைகளுள் இது முதன்மையானது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சித் திணையில் வாழ்ந்த மக்கள் குன்றக்குறவர்கள் ஆவர் . இவர்கள் ஐவனம், தினை ஆகிய தானியங்களைப் பயிரிட்டு வாழ்ந்தவர்கள் . குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகு. முருகுக்கு நெடுவேள், சேய் போன்ற பெயர்களும் உண்டு. முருகுவை ‘சேயோன்’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
மலையே முருகு வீற்றிருக்கும் இடமாகும். குறிஞ்சி நிலத்தில் செந்தினையை நீரோடு கலந்து தூவி வழிபடும் முறை இருந்தது. இது வேலன் வெறியாடிய சடங்கு எனப்படும். இது இளம்பெண்ணைப் பற்றிய முருகனை விலக்கிட வேண்டி நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இது புராதன சமயம் சார்ந்தது . முருகையே பிற்காலத்தில் ‘முருகன்’ என்று அழைத்தனர். மலையில் உறைந்து இன்றளவிற்கும் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் புரியும் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.


காடும் காடு சார்ந்த இடமும் முல்லை. இது குறிஞ்சிக்கும் மருதத்துக்கும் இடைப்பட்ட நிலம். இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் உணவாக வரகு, சாமை இருந்தன. முல்லை நில மக்கள் மால் எனப்படும் திருமாலை தங்கள் கடவுளாக வழிபட்டனர் . திருமாலை ‘மாயோன்’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
திருமால் நீலமணி போன்றவர் என்றும், கரிய மலர் போன்றவர் என்றும் கார்மேகம், காரிருள், கடல் போன்றவர் என்றும் சொல்லப்படுகிறது. சங்க இலக்கியங்கள், `ஒளிரும் திருமேனியையுடையவர்’ என்று குறிக்கின்றன. திருமாலை, ‘கண்ணன்’ என்றும் அழைக்கின்றனர். ஆடுமாடு மேய்த்தல் முல்லை நில மக்களின் தொழில். முல்லை நில மக்களில் ஒருவராகப் பிறந்தவரே கண்ணன் . முல்லை நில மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியவரே கண்ணன் என்றும் சொல்லப்படுகிறது.
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருத நில மக்களின் இறைவன் இந்திரன். ‘வேந்தன்’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இந்திரன் என்ற சொல்லுக்கு, `வேதக் கடவுளரின் தலைவன்’ என்று பொருள் . போருக்குச் செல்லும் முன்னர் இந்திரனையே மருத நில மக்கள் வணங்கினர். இந்திரன், பொன் இடியை ஆயுதமாகக் கொண்டவன். இந்திரனுடைய ஆயுதம் ‘வஜ்ஜிராயுதம். வஜ்ஜிரம் என்றால், `இடி’ என்று பொருள்.
இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக்கொண்டவன். சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா பற்றித் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்றோர் மருத நில மக்கள் ஆவர். வேளாண்மையே மருத நில மக்களின் தொழில்.


கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல். சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் நெய்தல் நிலத்து மக்கள் ஆவர். நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன். வருணன் ஆகாயத்தைக் குறிப்பவர். வருணன் மேகம், மழை, ஆறு, கடல் என்று நீர் நிலைகளுடன் தொடர்புடைய நீர்க்கடவுள். உலகம் முழுவதும் பரந்து இருப்பவர். `உலகத்தையே ஆள்பவர்’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.
நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர். சிலப்பதிகாரத்தில் மாதவி, கோவலன் அல்லாத வேறொருவனை தான் காதல்கொண்டது போல் பாடியதை மன்னிக்க வேண்டி கடல் தெய்வமான வருணனை வழிபடுகிறாள்.
முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. விடலை, காளை, மறவர், மறத்தியர் பாலை நிலத்து மக்கள். பாலை நிலத்தின் கடவுள் ‘கொற்றவை’.
கொற்றவைக்கு அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சி முதலியன படைக்கப்படும். கொற்றவை பவனி வரும்போது புல்லாங்குழல் இசைக்கப்படும். பாலை நில மக்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றியடைய தங்கள் தெய்வத்தை வழிபடுவர்.
